🍈 RM1-க்கு துரியன்! 5 நிமிடங்களில் 3,000 கிலோ விற்றுத் தீர்ந்தது!

திரெங்கானுவில் உள்ள காம்பங் புக்கிட் துங்கல் பகுதியில், ஒரு கிலோ வெறும் RM1 என்ற சிறப்பு விலையில் விற்பனை செய்யப்பட்ட 3,000 கிலோ துரியன் பழங்கள் வெறும் ஐந்து நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

27 வயதான வியாபாரி முஹம்மது இசார் இப்ராஹிம், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களும் “பழங்களின் அரசன்” என அழைக்கப்படும் துரியனை சுவைக்கும் வாய்ப்பைப் பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த விற்பனைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக தெரிவித்தார்.

அவரது கடையில் துரியன் காம்பங், IOI, உடாங் மெரா, D24 மற்றும் முசாங் கிங் உள்ளிட்ட பல்வேறு ரக துரியன்கள் பல அளவுகளிலும் தரங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன. “வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், பெரிய குடும்பங்கள் மற்றும் குறைந்த வசதி படைத்தவர்களும் துரியனை சுவைத்து மகிழ வேண்டும் என்பதற்காக கடந்த வாரம் இந்த சிறப்பு விற்பனையை தொடங்கினோம். விலை குறைவாக இருந்தாலும் பழங்களின் தரம் சிறப்பாகவே உள்ளது. அவை அளவில் மட்டுமே சற்று சிறியவை,” என்று அவர் கூறினார்.

இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள மக்கள் தினமும் காலை 8 மணிக்கே கடை முன்பு வரிசையில் நிற்கத் தொடங்குவதாகவும் அவர் தெரிவித்தார். இதுவரை வாடிக்கையாளர்களிடமிருந்து மிகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், பலர் மீண்டும் வந்து வாங்கிச் செல்வதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு பேராக், ஜொகூர் மற்றும் பகாங் மாநிலங்களில் துரியன் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விலையும் குறைந்துள்ளதாக முஹம்மது இசார் தெரிவித்தார். திரெங்கானுவிலிருந்து வரும் துரியன் இன்னும் ஓரிரு வாரங்களில் சந்தைக்கு வரும் என்றும், தற்போது தரம் A முசாங் கிங் துரியனையே ஒரு கிலோ RM10 என்ற குறைந்த விலையில் வாங்க முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular