
அரசாங்கம் வழங்கும் பல்வேறு நலத்திட்டங்களையும் உதவிகளையும் பெற, குறிப்பாக பி40 (B40) பிரிவைச் சேர்ந்த மக்கள் டிஜிட்டல் முறையில் மனுக்களைச் சமர்ப்பிக்க முன்வர வேண்டும் என்று கோலலங்காட் நகராண்மைக் கழக உறுப்பினர் பன்னீர்செல்வம் குப்பன் வலியுறுத்தியுள்ளார்.
பந்திங் நகரில் உள்ள தனது நகராண்மைக் கழக அலுவலகத்தில் வசதி குறைந்த இந்தியக் குடும்பம் ஒன்றுக்கு நிதியுதவி வழங்கிய பின்னர் தமிழ் நேசனுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக நகராண்மைக் கழக உறுப்பினராக பணியாற்றி வரும் நிலையில், தம்மைச் சந்திக்கும் பலரும் அரசாங்க உதவிகள் கிடைக்கவில்லை என்ற குறையை முன்வைப்பதாக அவர் கூறினார். ஆனால் அதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது, பலர் அரசாங்கத்தின் டிஜிட்டல் தளங்கள் வழியாக மனுக்களைச் சமர்ப்பிக்காததே முக்கிய காரணம் என்பது தெரியவந்ததாக அவர் விளக்கினார்.
மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் பல்வேறு உதவித் திட்டங்களையும் வாய்ப்புகளையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன. இருப்பினும், அவற்றைப் பெறுவதற்கு தேவையான விண்ணப்பங்களை டிஜிட்டல் முறையில் சரியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தெரியாதவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது தெரிந்தவர்களின் உதவியை நாடி அந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்தும் பழக்கத்தை மக்கள் வளர்த்துக்கொள்வதன் மூலம், அரசாங்கத்தின் பல்வேறு நலத்திட்டங்களின் பயனை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பன்னீர்செல்வம் குப்பன் தெரிவித்தார்.
