
(வி.எம்.சாமி)
பள்ளியில் இருந்து ஒரு வருடத்திற்கு முன் படிப்பை பாதியில் கைவிட்ட 16 வயது மாணவன் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருளுடன் ஜொகூர் பாருவில் கைது செய்யப்பட்டான்.
16 வயது பள்ளி மாணவன் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி போதைப் பொருளை பயன்படுத்துவதுடன் வினியோகம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த போது சம்பந்தப்பட்ட பள்ளி மாணவன் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ்படைத் தலைவர் டத்தோ அப்துல் ரஹ்மான் அர்சாட் தெரிவித்தார்.
ஜீலை 18ஆம் நாள் இரவு 9-00 மணியளவில் ஜொகூர் பாரு தெற்கு காவல்துறையின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு நடத்திய தொடர் சோதனையின் போது எட்டு பேர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

அடுத்த கட்டமாக நகர மையத்தில் வெகு தூரமுள்ள ஒரு ஹோட்டல் முன்புறம் உள்ள கார் நிறுத்துமிடத்தில் சோதனை நடத்திய போது சம்பந்தப்பட்ட பள்ளி மாணவருடன் நால்வர் கைது செய்யப்பட்டதாக ஜொகூர் மாநில போலீஸ் படைத் தலைவர் கூறினார்.
காரை சோதனை செய்த போது 60.78 கிலோ கிராம் மெத்தபெட்டமின் ரக போதைப்பொருள் அடங்கிய 50 பிளாஸ்டிக் பொட்டலங்களை மீட்டதாகவும் அதன் மதிப்பு 3.04 மில்லியன் வெள்ளி என்று அவர் தெரிவித்தார்.
எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் செயல்பாடுகளை நன்கு கவனிக்க வேண்டும் என்பதோடு அவர்களின் நண்பர்கள் வட்டத்தையும் அறிந்திருக்க வேண்டும் என்றார்
இந்த சம்பவம் 1952 ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஜொகூர் பாரு மாநில போலீஸ் படைத்தலைவர் டத்தோ அப்துல் ரஹ்மான் அர்சாத் தெரிவித்தார்.
