
நாட்டின் பொருளாதாரத் தலைநகரங்களில் ஒன்றான ஜோகூரில், தொழிலாளர் சந்தை இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. மாநிலத்தின் வேலையின்மை விகிதம் வெறும் 2.4 சதவீதமாகக் குறைந்து, தேசிய சராசரியான 2.9 சதவீதத்தை விடச் சிறந்த நிலையில் உள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்
தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மாநிலத்தின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (KPTB) தேசிய சராசரியைத் தாண்டி 71.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த எழுச்சிக்கு ‘மைஃபியூச்சர்ஜாப்ஸ்’ (MyFutureJobs) போன்ற அரசின் முன்னெடுப்புகள் முக்கியக் காரணமாக அமைந்துள்ளன.
இந்தத் தளத்தின் வாயிலாக ஜோகூரில் மட்டும் 66,661 வேலைவாய்ப்புகள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 361,000 பேர் வேலைக்காக விண்ணப்பித்துள்ள நிலையில், அதில் 161,000 பேர் பல்வேறு துறைகளில் வெற்றிகரமாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இங்கு நடைபெற்ற ‘கர்ணிவல் லிண்டுங்கி கெர்ஜாயா மடானி’ (Karnival Lindungi Kerjaya MADANI) நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர், வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு பொற்காலம் என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் 20-க்கும் மேற்பட்ட முன்னணி முதலாளிகள் கலந்துகொண்டு, மாதம் 16,000 ரிங்கிட் வரை ஊதியம் வழங்கக்கூடிய வேலைவாய்ப்புகள் உட்பட 2,000 பணியிடங்களை வழங்கினர்.
மேலும், தொழில்முறை ஆலோசனைகள், திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டல்கள் போன்ற சேவைகளை இக்கண்காட்சி இலவசமாக வழங்கியது, வேலை தேடும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
