குடும்பச் சுமையை ஏற்ற இளம்பெண்; கல்லூரி செல்லும் கனவை சாலை விபத்து பறித்தது!

வாழ்க்கையை மாற்றும் ஆயுதமாக கல்வியை நம்பியிருந்த 19 வயது லாவண்யா முருகன், குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தற்காலிகமாக வேலைக்குச் சென்றிருந்தார். சூழ்நிலை மேம்பட்டதும் மீண்டும் மேல்படிப்பைத் தொடர வேண்டும் என்ற அவரது இலட்சியம், ஒரு கண நேர சாலை விபத்தில் நிரந்தரமாக முடிவுக்கு வந்தது.

கல்லூரி வளாகத்தில் காலடி எடுத்து வைத்து பட்டம் பெற்று குடும்பத்தை உயர்த்த வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்த லாவண்யா, பெற்றோரின் சுமையைக் குறைக்க சில காலம் வேலை செய்வதென முடிவு செய்திருந்ததாக அவரது குடும்பத்தினர் உருக்கத்துடன் தெரிவித்தனர். ஆனால், அந்தத் தற்காலிக முடிவே அவரது வாழ்க்கையின் இறுதிப் பயணமாக மாறிவிட்டது.

கடந்த ஜூலை 16ஆம் தேதி மாலை 4.45 மணியளவில், ஊத்தான் மெலிந்தாங் சாலையின் 19ஆவது கிலோமீட்டரில் நேர்ந்த விபத்தில் லாவண்யா பலத்த காயமடைந்தார். தலை மற்றும் கழுத்தில் கடுமையான காயங்களுடன் தெலுக் இந்தான் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை முயற்சிகளும் பலனளிக்காமல், நேற்று ஜூலை 17ஆம் தேதி காலை 9.22 மணியளவில் உயிரிழந்தார்.

இந்த தகவலை பாகான் டத்தோ மாவட்ட காவல்துறை தலைமையகத் தலைவர் சூப்பிரிண்டெண்ட் முகமட் அலி பின் முகமட் ஜாலி உறுதிப்படுத்தினார்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், உள்ளூரைச் சேர்ந்த 65 வயது நபர் ஓட்டி வந்த நிஸான் ரிஜிட்/டிப்பர் வகை லோரி, அருகிலிருந்த உணவகத்திற்குச் செல்வதற்காக சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது, அதே திசையில் வந்த லாவண்யாவின் மோட்டார் சைக்கிள் லோரியின் பின்புற வலது பகுதியில் மோதியதால் இவ்விபத்து நிகழ்ந்ததாக அவர் தெரிவித்தார்.

விபத்தில் தொடர்புடைய லோரி மற்றும் மோட்டார் சைக்கிள் புஸ்பாகோம் (PUSPAKOM) தொழில்நுட்ப பரிசோதனைக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று கூறிய
சூப்பிரிண்டெண்ட் முகமட் அலி ,
1987ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)-இன் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

இவ்விபத்துக்கான முழுமையான காரணத்தை கண்டறியும் முயற்சி தொடர்வதாகவும், சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் போக்குவரத்து புலன் விசாரணை அதிகாரி நோர்மா பிந்தி அபு ஹசானை தொடர்புகொண்டு ஒத்துழைக்குமாறும் சூப்பிரிண்டெண்ட் முகமட் அலி கேட்டுக்கொண்டார்.

குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்க வேண்டும் என்ற உறுதியோடு வேலைக்குச் சென்ற லாவண்யா, மீண்டும் புத்தகங்களைத் தழுவ வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க முடியாமலேயே பிரிந்துவிட்டார். அவரது மறைவு, ஒரு இளம் உயிரை மட்டுமல்ல, ஒரு குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையையும் பறித்த சோகமாக மாறியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular