
டங்கனிகா ஏரியில் டான்சானியாவில் இருந்து காங்கோ சென்ற படகு கவிழ்ந்ததில், குறைந்தது 41 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்படகில் சுமார் 100 பயணிகளும் சரக்குகளும் இருந்ததாக டங்கனிகா மாகாணத்தின் போக்குவரத்து அமைச்சர் நோரிஸ் முலோங்கோயி கூறினார்; மேலும் 49 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பயணிகளை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகின் இரண்டாவது ஆழமான ஏரி:
“டான்சானியாவின் கிகோமா நகரில் இருந்து காங்கோவின் டங்கனிகா மாகாணத்தில் உள்ள கலெமி நகருக்கு சென்றுகொண்டிருந்த அந்த படகு, மபேரா கிராமத்திற்கு அருகே கவிழ்ந்தது,” என்று முலோங்கோயி ‘அசோசியேட்டட் பிரஸ்’ (AP) செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
டங்கனிகா ஏரி உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரியாகவும், பைக்கால் ஏரிக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது ஆழமான ஏரியாகவும் விளங்குகிறது. வியாழக்கிழமை நடந்த இந்தத் துயரச் சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை; இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் காங்கோவில் நடந்த படகு விபத்துகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
ஆறுகள் முக்கிய போக்குவரத்து வழி:
படகுகளில் பெரும்பாலும் அளவுக்கு அதிகமான பயணிகள் ஏற்றப்படுவதும், உயிர்காக்கும் அங்கிகள் இல்லாததும் இத்தகைய விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன.
காங்கோவின் 10 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு அந்நாட்டின் ஆறுகள் ஒரு முக்கிய போக்குவரத்து வழியாக உள்ளன; குறிப்பாக, அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாகவோ அல்லது இல்லாமலோ உள்ள தொலைதூர பகுதிகளில் ஆறுகளே போக்குவரத்திற்கு பெரிதும் பயன்படுகின்றன.
