
இந்திய சமூகத்தின் மேம்பாட்டை உறுதி செய்வதில் மடானி அரசாங்கம் தனது அசைக்க முடியாத அர்ப்பணிப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ‘செலிக் மடானி 2026’ ஆரம்பக் கல்வி மானியத் திட்டம் மற்றும் ‘தர்ம மடானி’ தொடர் 3 ஆகியவற்றின் கீழ் மொத்தம் 12.23 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்கள் சமூக நிறுவனங்களை வலுப்படுத்துவதையும், மனித மூலதன மேம்பாடு மற்றும் மக்களின் நலனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
சிரம்பானில் உள்ள விஸ்மா சிலோனிஸ் மண்டபத்தில் நடைபெற்ற ‘செலிக் மடானி 2026’ மற்றும் ‘தர்ம மடானி’ தெற்கு மண்டல நிகழ்ச்சியை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து அமைச்சரும் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான அந்தோணி லோக் சீவ் பூக் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பி40 வருமானக் குழுவைச் சேர்ந்த இந்தியக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு உயர்தர ஆரம்பக் கல்வியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ‘செலிக் மடானி 2026’ திட்டத்திற்கு மொத்தம் 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில், நாடு முழுவதிலும் உள்ள 162 தனியார் மற்றும் சமூக பாலர் பள்ளிகள் மூலம் 3,612 இந்தியக் குழந்தைகள் பயனடையும் வகையில் 8.87 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதே நிகழ்ச்சியில், ‘தர்ம மடானி’ திட்டத்தின் மூன்றாவது தொடரின் கீழ், நாடு முழுவதும் உள்ள 168 இந்து ஆலயங்களுக்குத் தேவையான கலை, கலாச்சார, சமூகப் பணிகளுக்காக 3.36 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஒப்புதல் கடிதங்கள் வழங்கப்பட்டன.
இதன் மூலம் இதுவரை ‘தர்ம மடானி’ திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 627 இந்து ஆலயங்களுக்கு மொத்தம் 12.54 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்கள் அனைத்தும் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு அரசாங்கம் கொண்டுள்ள விரிவான அணுகுமுறையைப் பிரதிபலிக்கின்றன என்று அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மலேசிய இந்தியர் சமூக உருமாற்றப் பிரிவு (மித்ரா) வாயிலாக, இந்த நிதி ஒழிதுக்கீடுகள் மிகவும் வெளிப்படையாகவும், பயனுள்ள வகையிலும் இந்திய சமூகத்தைச் சென்றடைவதை உறுதி செய்வோம் என்று அவர் உறுதியளித்தார்.
இத்தகைய முயற்சிகள் இந்திய சமூகத்தை அதிக அறிவுத்திறன் கொண்டவர்களாகவும், போட்டித்தன்மை மிக்கவர்களாகவும், ஒற்றுமையுடனும் மற்றும் வளமானவர்களாகவும் மாற்றுவதற்கு வழிவகுக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
