
தெலுக் இந்தானை உலுக்கிய கோர சாலை விபத்தில் இரு இளம் பெண்களின் உயிரிழப்புக்கு காரணமானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, 28 வயதான அலெக்ஸ் ராபர்ட் மீது இன்று தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜூலை 26-ஆம் தேதி மாலை 6.35 மணியளவில் ஜாலான் பாடாங் தெம்பாக் பகுதியில் நேர்ந்த விபத்தில், நூர் டானியா அரிஸ்ஸா சலீம் மற்றும் நூர் அத்திகா அப்துல்லா ஆகிய இரு இளம் பெண்கள் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பான விசாரணையின் தொடர்ச்சியாக, அலெக்ஸ் ராபர்ட் மீது மலேசிய தண்டனைச் சட்டம் 302-ஆவது பிரிவின் கீழ் இரு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதுடன், சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் மேலும் இரு குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்பட்டது என்பதால், குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் இருந்து எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
இதனிடையே, உயிரிழந்தவர்களின் உடற்கூறு பரிசோதனை அறிக்கை, நச்சியல் பரிசோதனை முடிவுகள் மற்றும் விசாரணை தொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்காக வழக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் என அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்கக் கூடாது என அரசுத் தரப்பு வலியுறுத்திய நிலையில், அதற்கு பாதுகாப்புத் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
மேலும், விபத்து நேரத்தில் போதைப்பொருளின் தாக்கத்தில் வாகனம் செலுத்தியதாகவும், அதன் காரணமாக பாதசாரி ஆடம் அர்ஜுனா அப்துல்லா காயமடைந்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, கவனக்குறைவாகவும் அலட்சியமாகவும் வாகனம் இயக்கியதால் சுரேஷ் அயரூ என்பவருக்கு காயம் ஏற்பட்டதாக மற்றொரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், சாலைப் போக்குவரத்து தொடர்பான இரு குற்றச்சாட்டுகளையும் அலெக்ஸ் ராபர்ட் மறுத்து, தாம் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இவ்வழக்கின் அடுத்த விசாரணை வரும் செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
