
இளைய தலைமுறையினரிடையே சைவ சமயத்தின் ஆழமான சிந்தனைகள், தமிழர் பண்பாட்டு அடையாளங்கள் மற்றும் ஆன்மிகப் பாரம்பரியங்களை வளர்க்கும் முக்கியப் பாலமாக திருமுறை விழாக்கள் விளங்குகின்றன என்று பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஙே கூ ஹாம் தெரிவித்தார்.
சித்தியவான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் கடந்த நடைபெற்ற மலேசிய இந்து சங்கம் மஞ்சோங் வட்டாரப் பேரவையின் 48ஆவது திருமுறை ஓதும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.
காலை 8.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டு திருமுறைகளை ஓதி, சைவ சமயத்தின் மீதான தங்களது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்தினர்.
திருமுறைகள் வெறும் சமயப் பாடல்கள் மட்டுமல்ல; அவை மனித வாழ்வுக்குத் தேவையான நல்லொழுக்கம், அறநெறி மற்றும் ஆன்மிக வழிகாட்டுதல்களை வழங்கும் அரிய பொக்கிஷங்களாகும் என்று டத்தோ ஙே கூ ஹாம் குறிப்பிட்டார்.
மேலும், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் திருமுறை ஓதும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்கும் வகையில் சமூக அமைப்புகள் இதுபோன்ற முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட அவர்,
இதன் மூலம் தமிழ்ச் சைவ மரபும் சமயப் பாரம்பரியமும் எதிர்கால தலைமுறைகளுக்கும் தொடரும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

இவ்விழாவுக்கு ஆதரவாக தனது அரசாங்க சிறப்பு மானிய நிதியிலிருந்து 5,000 ரிங்கிட் நன்கொடை வழங்குவதாக டத்தோ ஙே கூ ஹாம் அறிவித்தார். இதேவேளை, அஸ்தாக்கா சட்டமன்ற உறுப்பினர் ஜேசன் இங் தியேன் நிகழ்ச்சிக்கு 2,000 ரிங்கிட் நன்கொடையாக வழங்கினார்.
இதனிடையே, மலேசிய இந்து சங்கம் மஞ்சோங் வட்டாரப் பேரவையின் தலைவர் இந்திராணி தர்மன் உரையாற்றுகையில், திருமுறை என்பது ஒவ்வொரு இந்துவின் ஆன்மிக அடையாளமாக விளங்குவதுடன், உலகிற்கு கிடைத்துள்ள அரிய ஆன்மிகச் செல்வமாகும் என்றார்.
இத்தகைய விழாக்கள் மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறையினரிடம் சமயம், கலாசாரம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களை வளர்க்கும் சிறந்த தளமாக அமைவதாக குறிப்பிட்ட அவர், சமூகத்தினர் தொடர்ந்து ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இவ்விழாவில் மஞ்சோங் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு திருமுறைகளை ஓதினர். போட்டிகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டத்தோ ஙே கூ ஹாம் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
மாணவர்களின் சிறப்பான பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மலேசிய இந்து சங்க பொறுப்பாளர்கள், தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஆலயப் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 900-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
